இப்போதைக்கு மாமல்லபுரம் என்றவுடன் இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்புத்தான் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும். ஆனால் தமிழகம் மற்றும் சீனா இடையே கலாச்சார, வர்த்தகரீதியான உறவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது வரலாறு.
தமிழகத்தை பற்றி சீனர்கள் கி.மு.விலேயே அறிந்திருந்தனர். அப்போதே தமிழகமும் சீனாவும் பண்பாட்டு உறவுகள், வணிக உறவுகள் கொண்டு விளங்கியதை தொல்லியல் மற்றும் வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன. வூடி என்ற (கி.மு140-86) என்ற சீன அரசர் காலத்தில் "ஹுவாங்கு" பகுதியோடு வணிக உறவுகள் இருந்தது என சியன் ஹன்சு (Qian Han Shu) என்ற நூல் சொல்கிறது. ஹுவாங்க் என்ற குறிப்பிடும் ஊர் காஞ்சிபுரம் ஆக இருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். "பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் அவர்களது தலைநகரம். மாமல்லபுரம் அவர்களது துறைமுக நகரமாக இருந்திருக்க வேண்டும்" என்கிறார்கள் வரலாற்று பேராசிரியர்கள்.