நாம் பெற்ற ஆனந்த சுதந்திரத்திற்கு வயது 72. சுதந்திரம் பெற்ற பொழுது எனக்கு வயது பதினொன்று. நான் உயர்நிலைப் பள்ளி மாணவன். ‘வாராது போல் வந்த மாமணியாம் சுதந்திரத்தை‘ ஆடிப்பாடி வரவேற்றோம். ஆசிரியப் பெருமக்கள் சுதந்திரத்தின் அருமையையும் பெருமையையும் உரைத்தார்கள்; உணர்த்தினார்கள்.
சும்மா வரவில்லை சுதந்திரம். இதற்காக நமது தலைவர்களும், மக்களும் செய்த தியாகம் பெரிது; சொல்லில் அடங்காது. இருநூறு ஆண்டுகளாக ஆழக்கால் பதித்திருந்த ஆங்கிலேயர், இங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என மூட்டையைக் கட்டிக் கொண்டு போனார்கள். 1947 ஆகஸ்டு 15 இல் நம்மை நாமே ஆளுகின்ற உரிமையை மீட்டெடுத்தது நீண்ட நெடிய வரலாறு.